நம் எண்ணங்களை,நிகழ்வுகளை எழுதிவைக்கும் “டைரி எழுதும்” பழக்கத்தை விட மிகவும் சுவாரஸ்யமானது நமக்கென்று ஒரு வலைப்பூ(Blog) தொடங்கி தொடர்ந்து எழுதிவருவது.
அதிகம் அறியப்படாமலேயே போகும் டைரிகளைவிடவும் பலமாக அறியப்படும் வலைப்பூக்கள்(Blogs) என்னைப் போன்ற கருத்துக்களை பகிர்ந்து அதிகம் பேசத் துடிப்போருக்கு கிடைத்த வரப்பிரசாதம்.ஆனால் பெரிய உத்வேகத்துடன் தொடங்கப்பட்ட என் வலைப்பூவில் ஏறக்குறைய ஒராண்டாக பதிவுகள் எதுவும் பதிய முடியவில்லை. இதற்கிடையில் கடந்த மாதங்களில் பல உருப்படியான வேலைகளை செய்து முடித்தேன்.
வெகுநாட்களாக குறும்படம் இயக்கவேண்டுமென்ற எனது எண்ணம் கடந்தாண்டில் ஈடேறியது. அக்டோபர்-02 என்ற இளைஞர் குறித்த குறும்படத்தை இயக்கினேன்.

இதற்கு நன்றி சொல்ல வேண்டுமென்றால் நான் கூற வேண்டியது என் மேல்நிலைப்பள்ளித் தோழர்களுக்கு மட்டுமே.ஒளிப்பதிவு,ஆக்க உதவி,இயக்க உதவி,தாயாரிப்பு மேலான்மை,படத்தொகுப்பு,இசை மற்றும் நடிப்பு என எல்லா தளங்களிலும் எனக்கு தோள் கொடுத்து நான் குறும்படமெடுக்க எல்லாமுமாய் இருந்தனர். அவர்களை வைத்துக்கொண்டே சீக்கிரத்தில் என் அடுத்த குறும்படமான வெளிச்சம் என்ற கண் தானம் குறித்த குறும்படத்தை எடுத்து வெளியிட்டேன். எந்த ஓர் முன் அனுபவமுமின்றி இரண்டு குறும்படங்களை உருவாக்கிய விதத்தையும், அதற்கான எங்கள் உழைப்பையும் நினைத்தால் பெருமையாக உள்ளது. தரமான எத்தனையோ சிறந்த குறும்படங்களோடு ஒப்பிடுகையில் எங்கள் படைப்பு பின்தங்கியிருந்தாலும் எங்கள் குழுவின் உழைப்பு வீணாகாமல் முடிவில் ஒர் இயல்பான குறும்படமாக வந்ததே எங்களுக்கு மகிழ்ச்சி.

அடுத்ததாக இதுவரை குறும்பட உலகில் எடுக்காத ஒர் வித்தியாசமான கருவில் கதையமைத்து திகில்படமொன்றை உருவாக்குவதற்கான முன்தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறேன். அக்குறும்படம் எடுக்கப்படும் பட்சத்தில் அன்பர்களுக்கு தரமான படைப்பையே தருவேன்.மற்ற இரண்டு படங்களை விடவும் இதை சிறப்பாக காட்ட முயல்வேன். இது ஒருபுறமிருக்க என் முதுகலைப் படிப்பத் தொடர்ந்து ஆராய்ச்சிப் படிப்புக்கான(PH.d) வேலைகளிலும் கவனம் சென்றது. நிதி நிலைமையை சரி செய்தல், நண்பர்களின் அரட்டை, நெருக்கமானவர்களின் பிரிவு, புதியவர்களின் வரவு, எதிர்பாராதவர்களின் அன்பு என விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாமல் சென்றது கடந்த மாதங்கள். எனவே அடியேனால் வலைப்பூவில் சரிவர கவனம் செலுத்த முடியவில்லை.ஒராண்டாக எழுத துடித்த சிந்தனைகளை பகிர்ந்திட முடியாமல் போய்விட்டது. அச்சிந்தனைகளை காலம் கடந்து பகிர்ந்திட்டாலும் ருசிக்காது. இனி சுவாசிப்பதைப் போலவே சிந்திக்கும் எண்ணங்களை சிதறாமல் வலைப்பூவில் பதிவது என முடிவெடுத்துவிட்டேன்.
அடுத்த பதிவை விரைவில் பதிகிறேன்.














