Friday, 15 April 2011

அணுவாற்றல் அனுதாபிகளே இனிமேலும் ஏமாற்றாதீர்கள் --- புதுப்பிக்கத்தக்க ஆற்றலால் ஒழியட்டும் அணுவுலைகள்



அது ஒரு அழகிய நகரம் அதன் பெயர் ப்ரிப்யாட்(PRIPYAT) அன்றைய சோவியத் ஐக்கியத்தினுடைய மேற்கு பகுதியில் அமைந்திருந்தது. சிறந்த கட்டமைப்பு வசதிகள், இயற்கை அழகு, கொஞ்சும் மழலைகள், உழைக்கும் மக்கள் என சோவியத்தின் (இன்றைய உக்ரைன்) செல்லமான நகராய் இருந்தது. கூடவே அந்த நகரிலே செர்னோபில் அணு உலையும் அமைந்திருந்தது.ஏப்ரல் 25 ஆம் தேதி மாலையில் கொஞ்சிய படி விளையாடிய மழலைகளை இரசித்தபடியே கதிரவன் உறங்கச் சென்றான் அடுத்த நாள் நடக்கவிருந்த பேரழிவை அவனறிந்திருந்தால் நிச்சயம் உறங்கியிருக்க மாட்டான்.


அணுவுலைச் செயலமைப்பாளர்களின் (Nuclear Reactor Operators) கவனக்குறைவாலும் உலைக்குளிரமைப்பியின்(Plant Coolant) தோல்வியாலும் 1986 ஏப்ரல் 26 ஆம் தேதி அதிகாலையில் அணு விபத்துகளின் அகராதியிலேயே மிக மோசமான பேரழிவாய் கருதப்படும் செர்னோபில் அணுப்பேரழிவு நடந்தேறியது. கதிர்வீச்சு நகரம் தாண்டி, நாட்டையும் தாண்டி பரவியது.நகரத்து மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.

துளியாய் ஆரம்பித்த உயிரழப்பு கடலாய் மாறியது விபத்து ஏற்பட்ட சில மாதங்களில் வெறும் 31 பேர்கள் மட்டும் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும் அந்த பேரழிவால் இது வரை ஆறு லட்சத்துக்கும் மேல் மனித உயிர்கள் பலியாகியுள்ளதாக பல்வேறு அமைப்புகள் தகவல் தந்துள்ளன, இதுபோக கனக்கில் வராமல் விலங்கினங்கள்,பறவைகள்,தாவரங்கள் அழிந்து போயின.. அது வரை செல்ல நகரமாயிருந்த ப்ரிப்யாட் அதன்பின் செல்லாத நகராய் மாறியது(Ghost Town)..


அணுப்பேரழிவு ஒரு நகரை மட்டும் பாதிக்கவில்லை, ஒரு நாட்டை மட்டும் பாதிக்கவில்லை அது இருபெரும் கண்டங்களையே பாதிப்புக்குள்ளாக்கியது உக்ரைனை சுற்றியமைந்த ஐரோப்பிய-ஆசிய நாடுகளை தன் அசுரப்பசிக்கு ஆட்படுத்தியது. பிற நாட்டு சுற்றுசூழலும் அணுப்பேரழிவால் பாதிப்படைந்தது…கதிர்வீச்சு பட்டதால் பயிர்கள் பட்டுப்போனது…உயிர்கள் ஊனமானது.. அணு ஆற்றலை ஆக்கத்து பயன்படுத்துவோம் என ஜோசியம் கூறினார்கள் அணுவிஞ்ஞானிகள் ஆனால் என்ன நடந்தது?..

ஹிரோஷிமா-நாகசாக்கியில் முதன்முதலில் அணுப்பசிக்கு இரண்டரை லட்சம் மக்கள் இறையாகிப்போனார்கள் அணுப்பேரழிவின் இரண்டாவது தாக்குதலுக்கு ஆறு லட்சம் மனித உயிர்களும், எண்ணிலடங்கா இயற்கை வளங்களும் நாசமானது அடுத்தடுத்து உலகில் நிறைய அணுவுலைகளில் சிறு விபத்துகள் ஏற்பட்டுக்கொண்டு தானிருக்கின்றன., இனி அடுத்த பேரழிவிற்கு அணுவாற்றல் இருபத்தைந்தாண்டுகாலப் பசியோடு காத்திருக்கிறது.. அந்த பசிக்கு நாம் இந்த உலகையே கொடுக்கப் போகிறோமா?..எதற்காக இந்த அணு ஆற்றல் என்ற கேள்வியை நம் மக்களும் நமது ஆட்சியாளர்களும் கேட்காததே அணுவிஞ்ஞானிகள் நம்மைத் தவறான பாதைக்கு இட்டுச்செல்ல இடமளித்துவிட்டது..



மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யவே அணுவாற்றலைப் பயன்படுத்துவதாக கூறுகிறார்கள்... மின்சாரத் தேவையைத் தீர்க்க வேறு வழிகளே இல்லையென உண்மையை மழுங்கடிக்கிறார்கள் அணுவுலை அனுதாபிகள்.மின்சார ஆற்றல் அணுவில் உள்ளதைப் போலவே காற்று, கதிரொளி, நீரோட்டம், (wind, hydro, solar, etc..) போன்ற இயற்கை ஆற்றல்களில் உள்ளது.

மாசற்ற,பாதுகாப்பான, செலவீனம் குறைந்த, முறையில் பெறப்படும் ஆற்றலை ”புதுப்பிக்கத்தக்க ஆற்றல்” எனக்கூறுகிறார்கள் விஞ்ஞானிகள். அணுவிற்கு பதிலாக ஒர் மாற்றுவழியை இயற்கையன்னை நமக்கு வழங்கியிருக்கிறாள் ஆனால் அதில் கவனம் செலுத்தாமல் பெரிய அளவில் முதலீடுகளும் கடின உழைப்பும் அணுவாற்றலில் செலுத்தப்படுவதற்கு அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தங்கள் பின்னடங்கியுள்ளன.அவற்றைக் களைந்து இயற்கையைப் பாதுகாப்பதோடு மின்சார தேவையையும் நிறைவேற்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றலைவிட்டால் வேறு வழியில்லை. வெறும் சில ஆயிரம் கோடிகள் போட்டு பெரிய கவனமோ பராமரிப்போ இல்லாத இந்திய காற்றாலைகளின் மொத்த உற்பத்தி திறன் 8,896 மெகாவாட். இதில் தமிழகத்தில் மட்டும் 4906.74 மெகாவாட் மொத்த உற்பத்தி திறனாகும். புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் தமிழ்நாடுதான் தெற்காசியாவிற்கே முன்மாதிரியாக உள்ளது. நம் மாநிலம் பெறும் காற்றாலை உற்பத்தியை தெற்கு ஆசியாவில் எந்த நாடும் பெறவில்லை. நம் மாநிலத்தின் உருப்பிடியான சாதனை இதுவாகத்தான் இருக்க முடியும். ஐக்கிய இந்தியாவின் காற்றாலை உற்பத்தியில் தமிழகம் 55% பங்களிக்கிறது.

இதுபோல் பெரிய முன்னெடுப்புகள் இல்லாமலே புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சிறப்பாக செயல்படுகிறது. நடுவணமைச்சரவையில் 1992-ம் ஆண்டு முதல் புதுப்பிக்கத்தக்க ஆற்றலமைச்சகம் என தனி அமைச்சகமே உள்ளது ஆனால் அத்துறை அநாதையாக்கபட்டு வருகிறது.. கூட்டணிக் கட்சிகளும் அந்தத் துறையைப் பெற முனைந்ததில்லை ஆளும் கட்சியும் இதுவரை அதில் கவனம் செலுத்தியதில்லை.


பெரிய அளவு அடையாளம் பெறாததாலும் திட்டப்பணிகள் குறைவாகவுள்ளதாலும் இந்த அமைச்சகத்திற்கான நிதி ஒதுக்கீடு குறைவாகவே உள்ளது. அதிக முதலீடு, பெரிய அடையாளம், நிறைய திட்டப்பணிகள், மற்றும் சிறந்த செயலாக்கமும் இருந்தால் இந்தியாவிற்கு அணுவாற்றலே தேவைப்படாது அணுவாற்றலின் உற்பத்தி திறனைவிட பலமடங்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் பெறலாம் ஆனால் அதையெல்லாம் பரிசீலிக்காமல் நம் ஐக்கிய அரசு நிராகரிப்பதைப் பார்த்தால் அரசின் செயலில் நமக்கு சந்தேகம் எழுகின்றது எதற்காக அரசு இதை ஏற்க மறுக்கிறது?.. அணுவாற்றலை வல்லரசுகளின் அடையாளமாய் பார்கிறதா?.. அல்லது அந்நிய அழுத்தங்களுக்கு அரசு விலைப்போய்விட்டதா?. ஏனெனில் அணுவாற்றலினால் மின்சாரம் பெறப்பட்டாலும் அரசு நிறைய இழப்புகளை இதுநாள்வரை சந்தித்துவருகிறது.


இந்திய அணுவாற்றல் கழகம்”(Nuclear Power Corporation of India) என்ற அரசாங்க நிறுவனத்தை அமைத்து அதன்மூலம் இந்தியாவில் அணுவுலைகளை நிறுவியும், நிர்வகித்தும் வருகிறது இந்திய அரசு. இந்த நிறுவனம் இந்திய மக்களுக்கு அணுவினால் பெறப்பட்ட மின்சாரத்தை விற்கின்றது. இந்திய அணுவாற்றல் நிறுவனத்திற்கு சொந்தமாக ஆறு அணுமின் நிலையங்களும் அதனுள் இருபது அணுவுலைகளும் இருக்கின்றன. 20,740 கோடி ரூபாய் மூலதனத்தோடும் 34,269 கோடி ரூபாய் சொத்துகளோடும் இயங்கிவரும் இந்திய அணுவாற்றல் நிறுவனம் நடப்பாண்டின்படி இந்தியா முழுதும் வெறும் 4780 மெகாவாட் அளவே மொத்த உற்பத்தி திறன் கொண்டுள்ளது. இந்த அளவு தமிழகத்தின் காற்றாலை உற்பத்தி திறனான 4906.74 மெகாவாட் விட குறைவு. குறைந்த அணுவாற்றல் திறனை அமைக்கவும் பராமரிக்கவும் இதுவரை நாம் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் செலவழித்திருக்கிறோம் என்பது வருத்தமான உண்மை.

இது போக பல அணுவுலைகளை இந்தியா முழுவதும் நிறுவி 2032-ம் ஆண்டுக்குள் அணுவாற்றல் மூலம் 64000 மெகாவாட் அளவு உற்பத்தி திறன் பெறுவோம் என அறிவித்துக் கனவில் மூழ்கியிருக்கிறது நமது ஐக்கிய அரசு. அரசு குருட்டுக்கனவை காண்கிறது அது நிறைவேற நிறைய இயற்கை வளங்கள் அழிக்கப்பட வேண்டும்..நிறைய பணம் செலவிட வேண்டும் இது போக நாம் இந்தியா முழுவதையுமே ஆபத்திற்கு ஆட்படுத்த வேண்டும்..இந்தியாவிலும் ஒரு ப்ரிப்யாட் உருவாக வேண்டுமா?..இந்திய அணுவுலை அனுதாபிகள் இங்கு எந்த அணுவிபத்தும் நடக்கவில்லை என பரப்புரை புரிகிறார்கள் ஆனால் அது உலகமகா புளுகு..

இந்தியாவின் முதல் அணு விபத்து 1987-ல் சென்னையை அடுத்த கல்பாக்கத்திலும்,
இரண்டாவது விபத்து 1989-ல் தாராபூர் மின் நிலையத்திலும்,
மூன்றாவது விபத்து 1992-ல் மீண்டும் தாராபூரிலும்
நான்காவது விபத்து 1993-ல் உத்திரப்பிரதேசத்த்லும்
ஐந்தாவது விபத்து 1995-ல் கோடா மின் நிலையத்திலும்
ஆறாவது விபத்து 2002-ல் மீண்டும் கல்பாக்கத்திலும் இதுவரை ஏற்பட்டுள்ளது.

ஆறு முறை ஏற்பட்ட விபத்திற்கு இதுவரை அரசு 41,860 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. மூவாயிரத்திர்க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கதிர்வீச்சினால் தாக்கப்பட்டுள்ளனர். இந்த ஆறு விபத்துகளிலும் கதிர்வீச்சு மின் நிலையம் தாண்டி வெளியேறாததால் பெரிய பாதிப்புகளில்லை, கதிர்வீச்சு வெளியேறியிருந்தால் பல கிலோமீட்டர் வரை அணுமின்நிலையத்தைச் சுற்றியுள்ள பரப்பு மையானமாகியிருக்கும்..எவ்வளவோ நுட்பங்களை நுணுக்கமாய் பின்பற்றி பாதுகாப்பாய் பல ஆண்டுகளாக அணுவாற்றலில் ஈடுபட்டுவெரும் ஜப்பானே ஃபுகிஷோமா அணுவுலை கதிரியிக்கத்தை அடக்க முடியாமல் தவிக்கிறது…அதனை சுற்றியுள்ளப் பகுதிகளில் தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை அவர்களை விட அணு தொழில்நுட்பத்திலும் பாதுகாப்பிளும் பின் தங்கிய இந்திய அணுவாற்றல் கழகம் அது போன்ற சூழ்நிலையில் எப்படி பாதுகாக்கும்.?... அணுவாற்றலின் மிக மிகப்பெரிய அபாயமே அதனை செறிவூட்டும் போதில்லை அணுவைச் செறிவூட்டிய பின்புதான் அபாயத்தின் உச்சகட்டமே எட்டப்படுகிறது..

அணுக்கழிவின் தன்மைகளும் அது ஏற்படுத்தும் விளைவுகளும் நம்மை அச்சப்படவைக்கின்றன..அணுக்கழிவுகள் கடுமையான கதிர்வீச்சுடனிருக்கம். அதனை மற்ற கழிவுகளைப் போல் அப்புறப்படுத்த முடியாது அணுக்கழிவைப் பாதுகாக்க வேண்டும் ஏனெனில் அதன் கதிரியக்கம் வெளியேற வாய்ப்புகள் அதிகம் அவ்வாறு வெளியேறும் பட்சத்தில் ஒரு சிறந்த அணுகுண்டின் வேலையைச் செய்து மிடிக்கும் வல்லமைக் கொண்டவை அணுக்கழிவுகள். அணுக்கழிவுகளில் பலவகையுள்ளது ஆனால் அனைத்துமே இயற்கையை அழிக்கும் வல்லமைக் கொண்டவை.
டெக்னீடியம்-99(technetium-99) வகை அணுக்கழிவின் கதிரியக்கம் அட்ங்க 2,20,000 ஆண்டுகள் தேவைப்படும்.
ஐயோடின்-129(Iodine-129) வகைக்கு கதிரியக்கமடங்க 15.7 மில்லியன் ஆண்டுகள் தேவைப்படும்
இதுபோல பற்பல அணுக்கழிவு வகைகள் உள்ளன அவற்றை குறைந்தபட்சம் பத்தாயிரம் ஆண்டுகளிலுருந்து பத்துலட்சம் ஆண்டுகள்வரையாவது பாதுகாக்க வேண்டும். முழுதாய் ஒரு நூற்றாண்டைக்கூட உலகம் அணுவாற்றலோடு சுமூகமாக கழிக்கவில்லை அப்படியிருக்கையில் லட்சக்கனக்கான ஆண்டுகள் உயிரோடிருக்கும் கதிரியக்கக்கிருமியோடு உலகம் எப்படி சுமூகமாய் இனிவரும் காலத்தைக் கழிக்கும்..



பெரும்பாலும் அக்கழிவுகள் பூமிக்கு அடியிலேயே சுரங்கக்கிடங்கில் வைக்கப்படும். வைக்கும் இடத்திலோ அல்லது அதனை கொண்டு செல்லும் வழியிலோ விபத்துகள் ஏற்பட்டால் அது கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும் இதுபோல அணுக்கழிவு விபத்துகளும் உலகில் ஏற்பட்டிருக்கின்றன. தீவிரவாதிகள் அணுவுலையைக் கைப்பற்றத் தேவையில்லை அவர்கள் அணுக்கழிவைக் கைப்பற்றினாலே போதும் அவர்கள் நினைத்ததை சாதிக்கலாம். இந்திய அணுவாற்றல் கழகம் தங்களது அணுக்கழிவை மும்பையருகிலுள்ள ட்ராம்பேவில் பதப்படுத்தி சென்னைக் கல்பாக்கமருகிலுள்ள க்ரிஸ்டலின் பாறையின் அடியிலிருக்கும் ஆழ்பூமிக் கிடங்கில் பாதுகாக்கிறது அங்கே ஏதேனும் விபத்து ஏற்படுமாயின் அது கல்பாக்கம் அணுமின்நிலையத்தையும் கூடவே சென்னையையும் சேர்த்துச் சாப்பிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..

இத்தனை விலைகொடுத்தா நாம் அணுவாற்றலைப் பெற வேண்டும்...?

நம் கவனத்தை புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தில் செலவிட்டால் நிச்சயம் மாற்றம் பிறக்கும். இந்த உலகத்தில் போர்கள்,பேரழிவுகள்,அசம்பாவிதங்கள் என எது நடந்தாலும் மனிதன் அழிவான் அல்லது சில உயிரினங்கள் அழியும் முடிவாக என்றென்றும் இயற்கை வாழும் ஆனால் அணுவாற்றலால் இயற்கையே அழிய நேரிடும் முனைவர்.நம்மாழ்வார் ஐயா அவர்கள் அழகாய் குறிப்பிடுவார் ”மனிதன் தற்போது இயற்கையன்னையிடம் பால்குடிப்பதற்கு பதிலாக அவள் மார்பகங்களைக் கடித்து இரத்தம் குடிக்கிறான்” என்பார் அதுபோல நாம் தங்க முட்டைக்காக வாத்தை அருத்தால் பரவாயில்லை ஆனால் நம்மை நாமே இப்பொழுது அருக்க துனிந்துவிட்டோம்.




பசுமைப் புரட்சி என்ற பெயரில் உற்பத்தியைப் பெருக்க ஒரே வழி உயிர்கொல்லி மருந்துகளும்,இரசாயன உரமும்தான் எனக்கூறி விவசாய நிலங்களைத் தரிசாக்கிப்போட்டு உயிர்கொல்லிக் கிருமிகளை விதைத்த விஞ்ஞானிகளே அதேமுறையைத்தான் அணுவாற்றலிலும் பின்பற்றுகிறீர்கள். இனிமேலும் ஏமாற்றாதீர்கள். விஞ்ஞானிகள் என்றால் அறிவுஜீவிகள் என்று அவர்கள் சொல்வதிலிருக்கும் சாதக-பாதகங்களை அதே விஞ்ஞானங்கொண்டு அலசாமல் விடுவதே நம்மை இதுவரை சங்கடங்களுக்கு உள்ளாக்கியது. இந்த பதிவில் புள்ளி விவரங்களோடும், அறிவியல் உண்மைகளோடும் நாம் கேட்கின்ற கேள்விகளுக்கு என்ன பதில் தரப்போகிறது இந்திய அணுவாற்றல் கழகமும் இந்திய ஐக்கிய அரசும்?... அவர்களால் எந்த பதிலைச் சொல்லியும் நம்மை சமாதனப்படுத்த முடியாது காரணம் நமது கேள்விகள் தனி மனித கேள்விகளல்ல அது இயற்கை அன்னையின் ஆவேசக் கேள்விகள்!....



புள்ளிவிவரக் குறிப்புகள்: விக்கிபீடியா

Friday, 8 April 2011

ஆதரவு குரல்களே!... உங்கள் குரல்கள் எதற்காக?...





காமென்வெல்த் ஊழல், அலைக்கற்றை ஊழல், உலக கோப்பை கிரிக்கெட் என அடுத்தடுத்த பருவத்தில் தம் தலைப்புச்செய்திகளை பூர்த்தி செய்த இந்திய ஐக்கிய ஊடகங்கள் சில நாட்களாக திரு.அன்னா ஹஸாரேவின் ஊழலுக்கெதிரான உண்ணாவிரதத்தை தங்கள் தலைப்புச்செய்தியாக பதிவுசெய்து வருகின்றனர்.

ஊழலுக்கெதிராக அந்த ஒற்றை மனிதரின் அகிம்சைப் போர் கடந்த சில மாதங்களில் ஊடகங்கள் மூலம் நடுவணரசுக்கு ஏற்பட்ட நெருக்குதலைக் காட்டிலும் பல மடங்கு தந்துவருகிறது.ஊழல் செய்வோரை கடுமையாய் தண்டிக்க வகை செய்யும் சட்டத்தை எந்த இழுபறியுமில்லாமல் நிறைவேற்றத்தான் இந்த உண்ணாநிலை நடந்துவருகிறது.இத்தனை பரபரப்பும் கிளம்பக் காரணம் இரண்டே இரண்டுதான்,.1.இந்த கோரிக்கை அரசியல் கட்சிகள் மற்றும் அதிகார மையத்தை நேரடியாய் தாக்குகிறது.2.போராட்டத்திற்கு இளைஞர்கள் ஆதரவு தந்திருப்பதால் நடுவணரசு இதில் உடனடி தீர்வு காண வேண்டியக் கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளது..

ஒரு பொதுநலக் கோரிக்கைக்காக நேர்மை நோக்குடனும், தூய்மை மனதுடனும் உண்ணாநிலை மேற்கொள்ளும் அனைவரும் போற்றப்பட வேண்டியவர்களே அந்த வகையில் அன்னா ஹஸாரேவின் இந்த போராட்டம் வரவேற்க படலாம். ஆனால் நண்பர்களே நம் ஐக்கிய தேசத்தினுடைய சட்டம் கண்ட தோல்வி நாமறிந்த ஒன்றே அப்படி அந்த சட்டத்திலேயே பெரிய நம்பிக்கையற்ற தன்மை நிலவுகையில் அந்த சட்டம் மூலம் ஊழலுக்கு தீர்வு கிடைக்குமென்று நீங்கள் நினைப்பீர்களேயானால் அது மிக மிக முட்டாள்தனம். நம் தேசத்திலும் ஊழலுக்கெதிராக கடுமையான சட்டமுள்ளது என்று தோள்தட்டிக் கொள்ளலாமே தவிர இதனால் ஊழல் ஒழியுமென்பது அம்புலியைக் கையிலடக்கும் கனவே!... மாறாக நல்லமனிதர் பினாயக் சென் அவர்களை தீவிரவாதியென்று கைது செய்து சிறையிடப்பட்டதைப் போல் எப்படி வேண்டுமானாலும் நம் ஐக்கிய தேசத்தின் சட்டம் பாயும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.


என் வருத்தமெல்லாம் நேர்மையான ஒரு உண்ணாநிலை பரபரப்பு ஊடகங்களால் முக்கியமாக தொலைக்காட்சி ஊடகத்தால் விறுவிறுப்பான அரசியல் படமாக திரிக்கப்படுவது வேதனை தருகிறது…”நாங்களும் நல்லவனுங்கதானுங்கோ” என்று சில அரசியல் கட்சிகளும்,ஆர்வலர்களும் அங்கே சென்று போஸ் கொடுத்து வருகின்றனர். இது போதாதென்று தினமிரவு வட இந்திய சாலமன் பாப்பையாக்கள் & பாப்பம்மாக்கள் கொண்டு பட்டிமன்றம் வேறு,.. பிரச்சனைக்காக ஆதரிக்கிறார்களா அல்லது பெருமைக்காக ஆதரிக்கிறார்களா என்று தெரியாதவாறு குரல் தரும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள். விடாத இந்த விறுவிறுப்புக் காட்சிகளால் நம் ஐக்கிய அரசியலுக்கு நன்மையுண்டோ இல்லையோ இதை பரப்பரப்பாக்கி டி.ஆர்.பி ரேட்டிங் அதிகம் பெற்றதில் தொலைக்காட்சிகளுக்கு குஷியோ குஷி…...

பொதுவாக கருத்து கூறுவர்களில் இரு ரகமே அதிகமுண்டு அவ்வகை மக்களை இணைய சமூக இனைப்பகங்களில் அதிகம் காணலாம்.
1. எல்லாவற்றிக்கும் ஓ போடுபவர்கள்,(Optimists)
2. எல்லாவற்றிக்கும் சீ போடுபவர்கள்(Pessimists)
ஒரு செயலை அல்லது செய்தியையும் பகுத்தறிந்து, நுனுக்கமாக அரசியல் விளைவ சரிபார்து ஒரு முடிவுக்கு வருகிறவர்கள் அதாவது சூழ்நிலையின் பொருளறிந்து கருத்தைக் கூறும் சிந்தனையாளர்கள் மிகக் குறைவு.. எந்தவொரு செய்தியையும் மேலோட்டமாய் பார்த்து ஓ போடுவதும் சரி, சீ போடுவதும் சரி, இரண்டுமே தவறு தான் தோழர்-தோழிகளே!...
"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு" -குறள்423:அறிவுடமை.
இந்த குறள் உங்கள் நினைவிலிருந்தால் எல்லா நேரங்களிலும் உங்கள் முடிவு சரியாகவே இருக்கும். தற்போது நடக்கும் உண்ணாநிலை களேபரங்களிலும் உங்கள் சிந்தனையைத் தனித்து பதிவு செய்ய முடியும்…

உலகக்கோப்பைக் கிரிக்கெட்டிலிருந்தே தொடங்கிய கடந்த வார தேசப்பற்றை தொய்வில்லாமல் இன்னுமொரு வாரம் தொடரும் என் ஐக்கிய தேச தோழர்களைக் கண்டால் மெய்சிலிரிக்கிறது ஆனால் இன்னும் எத்தனை வாரத்துக்கு தொடர்வார்கள் என்றுதான் தெரியவில்லை.. இன்று அன்னா ஹஸாரேவிற்கு பூரிப்போடு குரல் கொடுக்கும் பத்திரிக்கையாளர்கள்,அரசியல் கட்சியனர் மற்றும் பொதுமக்களே உங்களுக்கெல்லாம் ஒரு கேள்வி

ஐரோம் ஷர்மிளா(Irom sharmila) பற்றி நீங்கள் அறிந்ததுண்டா?.. உங்களில் எத்தனைப் பேருக்கு அந்த இரும்பு பெண்மனி பற்றித் தெரியும்?..அவரைப் பற்றி தெரிந்தவர்கள் நிச்சயமாய் இந்த உண்ணாநிலைக் காட்சிகளை வேடிக்கையோடே கண்டுகளித்திருப்பார்கள். சுமார் பதினோறு ஆண்டுகளாக இந்திய ஐக்கிய அரசின் “இரானுவ சிறப்பதிகார சட்டம்” திரும்ப பெறக்கோரி உண்ணாநிலை இருந்து வருகிறார்.. காலை சிற்றுண்டி மற்றும் மதிய சாப்பாட்டுக்கு நடுவில் உண்ணாநிலையிருக்கும் தலைவர்களால் உண்ணாநிலை அசிங்கப்பட்டுவிட்டது… இவர்களுக்கு நடுவில் ஷர்மிளா இமாலய உயரத்திலிருக்கிறார் இதுவரை நடுவணரசும்,ஊடகங்களும், பொதுமக்களும் அவரைக் கண்டுகொள்ளவேயில்லை அவரைக் கண்டுகொண்டப் பிறகு ஹஸாரேவின் உண்ணாநிலைக்கு கைதட்டும் எண்ணம் எனக்கு வரவில்லை… ஏனெனில் ஹஸாரேவின் உண்ணாநிலையின் நோக்கம் நேர்மையானது அவரும் நேர்மையானவர் ஆனால் அவரிருக்கும் இந்த உண்ணாநிலை செயற்கையாகிவிட்டது…அரசியலாட்டமாகிவிட்டது… ஒரு சட்டத்தை சேர்க்க ஹஸாரே விரும்புகிறார் ஒரு சட்டத்தை எடுக்க ஷர்மிளா விரும்புகிறார்… ஹஸாரேவின் கோரிக்கை நிறைவேற்றப் படாததால் வரும் தீமைகளைக் காட்டிலும் ஷர்மிளாவின் கோரிக்கை நிறைவேற்றப் படாததால் வரும் தீமையே அதிகம்… ஆனால் அந்த இரும்பு தாய்க்கு எத்தனை குரல்கள் எழும்பின…? பிரச்சனையின் தீவிரம் என்ன என்பதை அறிந்தா மக்கள் குரல் கொடுக்கிறார்கள்?...மனிப்பூரில் அந்த பெண்மனி உண்ணாநிலையிருக்கும் இடம்வரை ஊடகங்களால் செல்ல முடியவில்லையா?....

பதினோறு ஆண்டுகளாக உண்ணாநிலை மேற்கொண்டுவருபவரை இந்த முறையாவது தேசத்துக்கு அடையாளப் படுத்த வேண்டியது ஊடகங்களின் கடமை அதை அவர்கள் செய்ய வேண்டுமென்றே விரும்புகிறேன் ஊடகங்களுக்கு கடிதமும் எழுதிவிட்டேன்…. 2005-ம் ஆண்டு கவிஞர்.ஷர்மிளா நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டார் எனினும் அங்கே நிலவிய அரசியலால் விருது பெற முடியவில்லை. அவர் மீண்டும் நோபலுக்கு பரிந்துரைக்கப்பட்டு விருது பெறுவாரேயானால் அன்று தான் நம் தேசம் அவரை அடையாளம் காணப்போகிறதா?...அன்றுதான் அவர் கொண்டாடப்படப் போகிறாரா?...

என் இந்திய ஐக்கிய தேசத்து மக்கள் ஆதரவு குரல் கொடுப்பதில் வல்லவர்கள் ஆனால் அவர்கள் எதற்காக குரல் கொடுக்கிறோம் என்பதை அதிகம் ஆராய மாட்டார்கள். அவர்கள் கொடி பிடிப்பது பிரச்சனைக்காகவா அல்லது பெருமைக்காகவா என்று புரியாது..... தன் எச்சைக் கையை விட மற்றவன் கையை கழுவுவதிலேயே ஆர்வம் காட்டுகிறார்கள் மக்கள்… தேசியநலனுகாக கூடும் பொதுநலவாதிகளின் பல கூட்டம் ஊழல் ஒழிப்பதில் அவர்கள் விருப்பங்கள் பாதிக்குமேயானால் சுயநலத்தோடு கூட்டம் கலைந்துவிடும்... ஹஸாரேவிற்கு ”திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டையொழிக்க முடியாது....” என்ற பாடலை அர்பணிக்கிறேன்…. திருட்டையொழிக்கும் சட்டத்தை திருடனிடமே கேட்டு பெற வேண்டிய சூழ்நிலையில் இன்று இந்திய ஐக்கியம் சிக்கிக்கொண்டிருப்பதை நினைத்தால் சிலிர்க்கிறது...